SIKA SPEAKS

Happy New Year 2024 Readers PLS.SUBSCRIBE THANK YOU FOR VISITING. Sika Speaks.STAY CONNECTED "

சர்க்கரையும் உடல்நல அக்கறையும்


சர்க்கரை நோயாளிகள் வேண்டிய குறிப்புகள்! #HealthTips 

இது ஒரு நோயல்ல... குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம். மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நுழைவாயில். இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்... என ஒரு பெரும் பட்டியலே உண்டு. சரி... சர்க்கரைநோயை முற்றிலுமாகப் போக்க முடியுமா? முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். சர்க்கரைநோய் என்றால் என்ன, ஏற்பட என்ன காரணம், தவிர்க்கவேண்டிய உணவுகள், பின்பற்றவேண்டிய வழிமுறைகள்... அனைத்தையும் பார்க்கலாம். 

வகைகள் 

டைப் 1 சர்க்கரைநோய்:  சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்  .

டைப் 2 சர்க்கரைநோய்:பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். 

காரணங்கள் 

அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute stress): மனஅழுத்தம் ஹார்மோன் சமநிலையைப் பாதிப்பதால், இன்சுலின் பணி மந்தமடையும். 

உணவு: உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கும், உடல்பருமன் அதிகரித்து அதை கவனத்தில்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

பரம்பரை: பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும். அதிகக் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், அவர்களின் வயதான காலத்தில் டைப்-2 டயாபடீஸால் பாதிக்கப்படுவார்கள். 

தொற்று: சில சமயங்களில் காயங்களாலோ, அறுவைசிகிச்சையின்போதோ ஏற்படும் தொற்றுகள் ஹார்மோன்களைப் பாதிப்பதால், சுரப்பிகளின் பணி நின்றுபோகும். டைப் 1 சர்க்கரைநோயை ஏற்படுத்தும் இந்த வைரஸ்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை பாதித்து, இன்சுலினைச் சுரக்கும் கணையத்தின் (பான்கிரியாஸ்) செல்களை அழிக்கக்கூடியவை. 

வயது: பொதுவாக நடுவயதினரை இது தாக்கும். 

அதீதக் கொழுப்பு: உடல்பருமனால் இடுப்பைச் சுற்றிச் சேரும் அதிகக் கொழுப்பு, இன்சுலினின் பணியை முடக்கும். 

கர்ப்பகாலம்: இந்தச் சமயத்தில் பிளசென்ட்டாவின் ஹார்மோன்களால் இன்சுலின் அளவு கூடும். இதனால் டயாபடீஸ் ஏற்படும். 

அறிகுறிகள்... 
* அதிக தாகம்

* அதிகப் பசி

* அடிக்கடி சிறுநீர் கழித்தல் 

* மங்கும் பார்வைத்திறன்

* எடை கூடுதல் அல்லது குறைதல்

* புண்கள் ஆறும் தன்மை குறைதல் 

* தோல் அரிப்பு

* சிறுநீர்த் தொற்று

* நீர்ச் சமநிலைக் குறைபாடு

இந்த அறிகுறிகளுக்குப் பின்னரும் சர்க்கரைநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், கோமாவோ உயிரிழப்போகூட ஏற்படலாம்.

கண்டறியும் முறைகள்... 

சிறுநீரகப் பரிசோதனை: வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப்  பொறுத்து `+’ முதல் `+ + + +’  வரை என குறிப்பிடப்படும். 

ரத்தப் பரிசோதனை: இதன் சாம்பிளும் வெறும் வயிற்றிலும், காலை உணவுக்குப் பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இதில் கணக்கிடப்படும் அளவு 110 mg/dl - 180 mg/dl-க்கு அதிகமாக இருந்தால் `டயாபடீஸ்’ என்கிறார்கள். 

HbA1C டெஸ்ட்: இதுவும் ஒரு ரத்தப் பரிசோதனைதான். இதன் மதிப்பு 7 அல்லது 7-க்கு கீழே இருந்தால் நார்மல். உடலின் சுகர் கட்டுப்பாட்டு திறனை அறிய உதவுகிறது. 

சிகிச்சை முறைகள்... 

சிகிச்சையின் முக்கிய அம்சங்களில் 

* உணவு

* உடற்பயிற்சி

* இன்சுலின் ஊசி மருந்துடன் மாத்திரைகள்

* டயாபடீஸைக் குறித்த விழிப்புணர்வு
ஆகியவை அடங்கும். 

சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவுகள்... 

* கீரைகள்

* சூப் வகைகள்

* எலுமிச்சை

* வெங்காயம்

* புதினா

* வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்

* நட்ஸ்

* நறுமணமூட்டிகள் (Spices).

தவிர்க்கவேண்டிய உணவுகள்... 

* தேன் 

* சர்க்கரை 

* ஸ்வீட்ஸ்

* டிரை ஃப்ரூட்ஸ்

* குளூகோஸ் 

* சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்

* கேக், பேஸ்ட்ரீஸ்

* பொரித்த உணவுகள்

* இனிப்பான குளிர் பானங்கள்

* மது

* ஜூஸ் வகைகள்

சாப்பிடவேண்டிய மாதிரி மெனு... 

காலை எழுந்தவுடன்… 

வெதுவெதுப்பான நீர், ஒரு கிளாஸ் லெமன் டீ
(அல்லது)
ஆடை நீக்கப்பட்ட ஒரு டம்ளர் பால்.

காலை உணவு

இட்லி-2, தோசை-1, சாம்பார் - 1 கிண்ணம், மீடியம் சைஸ் ஆப்பிள் (அல்லது)
சப்பாத்தி-2, சென்னா மசாலா - 1/2 கிண்ணம், கொய்யா-1 
(அல்லது)
கோதுமை பிரெட், முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட், ஆப்பிள்-1.

காலை இடை உணவு

தயிருடன் கலந்த வெள்ளரி சாலட் 
(அல்லது)
ஏதாவது ஒரு சூப் - 1 கப்.

மதிய உணவு

சாதம் - 100 கிராம், பருப்பு - 20 கிராம் (அல்லது) சாம்பார் - 1/2 கப், அரைக்கீரை அல்லது பொன்னாங்கண்ணி பொரியல் - 100 கிராம், கத்திரிக்காய் புளி கொத்சு - 100 கிராம், மோர் - 1 டம்ளர். 

(அல்லது)

சிக்கன் சூப் - 1 கப், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் - 20கி, ஃப்ரைடு ரைஸ் - 100 கி (வீட்டில் தயாரிக்கப்பட்டவை), வறுத்த கோழி - 2 லெக் பீஸ், ஆலோவேரா டிரிங்க் - 1 கிளாஸ்.

மாலை

2 - 3 பாதாம் பருப்புகள், லெமன் ஜூஸ் - 1கிளாஸ்
(அல்லது)
பாசிப் பயறு சுண்டல் (50கி), ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ்.

இரவு உணவு

ஃபுல்கா சப்பாத்தி (2), சென்னா மசாலா, பருப்பு, பயறு – அரை கப், தயிர் பச்சடி - 30 கிராம்
(அல்லது)
சோள சிறுதானிய தோசை (2-3), புதினா சட்னி – அரை கப். 
(அல்லது)
வெஜிடபிள் சாண்ட்விச் - 2.

படுப்பதற்கு முன்னர்...

ஆப்பிள், கொய்யா, திராட்சை கலந்த சாலட் (அல்லது) ஏதாவது ஒரு பழம், ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ்.

சர்க்கரைநோயாளிகளுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் சில உணவுகள்...

* வெஜிடபிள் சாலட்

* ஃப்ரூட் சாலட்

* ஆவியில் வேகவைத்த உணவுகள் (இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை)

* வேகவைத்த மீன்

* முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட்

* பருப்பு, பயறு, சுண்டல் வகைகள்

* கீரைப் பொரியல்

* இனிப்பு இல்லாத காபி, டீ

* இனிப்பு இல்லாத இஞ்சி டீ, பிளாக் டீ

* எல்லா வகையான சூப்

பின்பற்றவேண்டிய சில விஷயங்கள்... 

* மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவு முறையை பின்பற்றவேண்டியது அவசியம்.

* பசியைத் தாங்கக்கூடிய, ஆனால் கட்டுப்பாடான உணவுமுறை அவசியம். கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக பசியோடு இருக்கக் கூடாது. 

* குறைந்த எண்ணெயிலும் உப்பு இல்லாமலும் சமைப்பது நல்லது. பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும்.

* அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். உணவுக்கு முன்னர் அருந்தும் ஒரு டம்ளர் நீர், உணவின் அளவைக் குறைக்கும்.

* அதிகமாக வேகவைக்கப்படும் காய்களிலிருந்து சத்துகள் வெளியேறி வீணாகும். உணவை அளவோடு வேகவைத்தால், சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.

* ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு முறை உடலில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். 

* கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

* சாப்பிட்ட உணவின் கலோரிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கவும் வேலை செய்யவும் வேண்டும். 

* டயட்டீஷியனின் ஆலோசனையின்போது, நமக்குள்ள அசௌகரியங்களைக் குறிப்பிட்டு ஆலோசனை பெற வேண்டும்.

* ஆறு மாதத்துக்கு ஒரு முறை உடல் பரிசோதனையும், மாதத்துக்கு ஒரு முறை எடை பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். 

* உங்கள் மருத்துவர் அல்லது உணவு ஆலோசனை நிபுணர் பரிந்துரைத்த சத்தான உணவு வகைகளை உட்கொள்ளவும். 

* மருத்துவரின் அறிவுரைப்படி சிறந்த உடற்பயிற்சிகளை, குறைந்தது 30 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். 

* பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். 

* தினசரி இரண்டு முறை பல் தேய்த்து வாய் கொப்பளிப்பது நல்லது. 

* ரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலையும் உணவு உண்ணும் முறையால் கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ளவும்.

ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்பு உணவுகள்...

பாகற்காய் 

தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால், டயாபடீஸ் வராமல் தடுக்கும். இதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பாகற்காயில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 


வெந்தயம் 

வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

நெல்லி 

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தினமும் 2 நெல்லிக்காய்  உட்கொண்டுவந்தால், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.'

கறிவேப்பிலை 

இது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும். தினசரி 10 முழு கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டுவந்தால், பரம்பரை சர்க்கரைநோயையும், உடல்பருமனால் ஏற்படும் சர்க்கரைநோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம்.

கொய்யா 

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து, டைப் - 2 சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகளும் சத்து மிகுந்தவை. கொய்யா இலைகளைக் காயவைத்து, பொடியாக்கி, நீரில் கொதிக்கவைத்து குடித்துவர, சர்க்கரைநோய் வருவதைத் தடுக்கலாம். 

முருங்கை இலை 

முருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும்.

பட்டை 

தினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

உடற்பயிற்சி

சரியான, முறையான உணவோடு உடற்பயிற்சி செய்வது சர்க்கரைநோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். தினமும் உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகோ (உடலில் சர்க்கரை அதிகமாகும் நேரம்) அல்லது காலை வெறும் வயிற்றிலோ உடற்பயிற்சி செய்யலாம். சில நேரங்களில் உடற்பயிற்சிக்கு பின்னர் ஹைபோகிளைசீமியாவின் (Hypoglycemia) அறிகுறிகளான சர்க்கரைக் குறைபாடு ஏற்படலாம். இந்த நேரங்களில் குறைந்த சர்க்கரை அளவை ஈடுகட்ட, சக்கரைக்கட்டி அல்லது மிட்டாய் சாப்பிடலாம்.

சர்க்கரைநோயாளிகளுக்கான ஸ்பெஷல் சர்க்கரை(!) ரெசிப்பி 

டியாபெடிக் பூசணிக்காய் அல்வா

தேவையானவை

துருவிய பூசணிக்காய் - 1 கப், பால் - 1 கப், குங்குமப்பூ – சிறிதளவு, ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், சுகர் ஃப்ரீ ஸ்வீட்னர் - 1 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், பாதாம் (துருவியது) – தேவைக்கேற்ப.

செய்முறை

வாணலியில் நெய் ஊற்றி, சூடானவுடன், துருவிய பூசணிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பால் சேர்த்து, சுண்டும் வரை கிளறவும். பிறகு, சுகர் ஃப்ரீ, ஏலக்காய் தூள், குங்குமப் பூ சேர்த்துக்கொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் வைத்து பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ஸ்ரீகாந்த் சந்தானராமன் 


Post a Comment

0 Comments